நோக்கியாவை லாபம் தராத முதலீடாக ஒதுக்கிவிட்டது மைக்ரோசாஃப்ட். கடந்த வருடம்தான் நோக்கியாவை 7.6 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. முன்னாள் மைக்ரோசாஃப்ட் தலைவர் ஸ்டீல் பால்மர் -ன் இந்தக் காரியம் அப்போதே தீவிரமாக விமர்சிக்கப்பட்டது. இந்நாள் தலைவர் சத்யா நாதெள்ள, அந்தத் தவறை இப்போது சரிசெய்ய விரும்புகிறார் போல.
'நிர்வாகத்தில் கடுமையான முடிவுகளை எடுக்கப்போகிறோம். தயாராக இருங்கள்’ என்று கடந்த ஜூன் மாதமே சத்யா அனைவருக்கும் மெமோ அனுப்பியிருந்தார். இப்போது விண்டோஸ் ஃபோன் ஹார்டுவேர் துறையில் பணிபுரியும் 7,800 பேரை வேலையில் இருந்து நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளார் சத்யா நாதெள்ள. மேலும், 7.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள நோக்கியா முதலீடை ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒதுக்கிவிட்டார் சத்யா.
என்ன பிரச்னை?
விண்டோஸ் ஃபோன் வர்த்தகம் இருக்கட்டும். மைக்ரோசாஃப்ட்-ன் எதிர்காலமே யாராலும் கணிக்க முடியாதது போல் இருக்கிறது. கூகுள், ஆப்பிள் போன்று தன்னுடைய எதிர்காலம் குறித்த தெளிவு இல்லாமல் மைக்ரோசாஃப்ட் தடுமாறுவதாக எக்ஸ்பர்ட்டுகள் கருதுகிறார்கள்.
ஆனால் பிரச்னையே மைக்ரோசாஃப்ட்டை ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுவதுதான். ஏனென்றால், அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம். ஆப்பிள் ஒரு ஹார்டுவேர் நிறுவனம். தன்னுடைய விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உலகம் முழுக்க கொண்டுசேர்த்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் சாதனை. தன்னுடைய கேட்ஜெட்டுகளை உலகம் முழுக்க ‘கெத்து’ கேட்ஜெட்டுகளாக மார்கெட் செய்தது ஆப்பிள்-ன் சாதனை.
இங்குதான் ஒரு ட்விஸ்ட். மைக்ரோசாஃப்ட் நிறுவனமும்தான் ஸ்மார்ட்ஃபோன்களைத் தயாரித்தது. ஆனால், ஏன் பிரபலமாகவில்லை? இங்குதான் மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அடிப்படையில் வேறுபட்டிருந்தாலும் ஒரே புள்ளியில் இணைகின்றன.
ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் பெறும் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் அதன் டிஸைனோ, ஆபரேட்டிங் சிஸ்டமோ, வசதிகளோ இல்லை. பிஸினஸ் எக்கோசிஸ்டம்தான் இவற்றின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். ஆப்பிள் நிறுவனம் ஹார்டுவேர், சாஃப்ட்வேரை மட்டும் உருவாக்கிவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களுக்கு கதவைத் திறந்துவிட்டது. அதனால், அதன் வர்த்தகம் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொடுத்துவிட்டு, அப்ளிகேஷன் டெவலப்பர்களை வாரியணைத்துக்கொண்டது. சாம்சங், எல்ஜி, லெனோவோ போன்ற ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு இதுபெரும் வசதியாகப்போய் விட்டது. முன்புபோல் ஒவ்வொரு ஃபோனுக்கும் தனித்தனியாக ஆபரேட்டிங் சிஸ்டம் உருவாக்கத் தேவையில்லை. ஹார்டுவேரை மட்டும் உருவாக்கிவிட்டு, நிம்மதியாக இருந்தன. இந்த பிஸினஸ் எக்கோசிஸ்டத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் ஃபோன் முயற்சி மூலம் ஒரு அப்ளிகேஷன் டெவலப்பர், ஹார்டுவேர் உருவாக்கம், ஆபரேட்டிங் சிஸ்டம் டெவலப்மென்ட் என அனைத்து துறைகளையும் தானே செய்துகொள்ளமுடியும் என்று நினைத்ததுதான் மைக்ரோசாஃப்ட்-ன் தவறு. அவசரப்பட்டுவிட்டோம் என்று சுதாரிப்பதற்குள் நோக்கியாவையும் வாங்கி தன்கையை தானே கட்டிப் போட்டுக்கொண்டது மைக்ரோசாஃப்ட்.
என்னதான் நோக்கியாவை வைத்துக்கொண்டு மைக்ரோசாஃப்ட் ஃபோன்களை விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் லூமியா ஃபோன்களைக் கொண்டுவந்தாலும் சந்தையில் எடுபடவில்லை. காரணம், அப்ளிகேஷன் டெவலப்பர்களை முழுமையாக உள்ளே விடாமல் இருந்ததால்தான். இன்னொரு பக்கம் ஆப்பிள் உயர்ரக செக்மென்ட்டை குறிவைத்து ஒவ்வொரு முறையும் வெற்றிபெற, ஆண்ட்ராய்டு ‘மாஸ் ஆடியன்ஸ்’ ஃபார்முலாவில் எல்லோர் கையிலும் ஸ்மார்ட்ஃபோனைத் திணிக்க, தன்னுடைய டார்கெட் வாடிக்கையாளர்கள் யார் என்பதிலேயே இன்னும் குழப்பமாக இருந்தது மைக்ரோசாஃப்ட். உயர்ரக லூமியா ஃபோன்கள் விற்பனைக்கு வரும். ஒரே மாதத்துக்குள் பட்ஜெட் லூமியா ஃபோன்களும் வரும். ஆப்பிள் இந்தத் தவறை செய்ததே இல்லை. ஒரு ஃபோன் என்றாலும் கெத்தாக சந்தைப்படுத்தும் வல்லமை படைத்தது ஆப்பிள்.
லூமியா ஃபோன்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த மார்கெட் ஷேர் மிகவும் குறைவு. காரணம், iOS மற்றும் ஆண்ட்ராய்டு-ன் மார்கெட் ஷேர் மிக மிக வேகமாக எகிறிக்கொண்டிருக்கிறது. மைக்ரோசாஃப்ட்-ன் ஃபோன் பிஸினஸ் கடந்த மூன்றாவது காலாண்டில் 1.4 பில்லியன் டாலர் வருவாயைக் குவித்திருக்கிறது. அதிகமாகத் தெரிகிறதா? இதே சமயம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பிஸினஸ் வருவாய் மட்டும் 40.3 பில்லியன் டாலர்கள்!
அப்ப விண்டோஸ் ஃபோன் அவுட்டா?
ஃபோன் மார்கெட்டை புரிந்துகொண்டிருப்பதிலேயே தவறு இருக்கிறது என்பதை சமீபத்திய அறிக்கையில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். சத்யா நாதெள்ள அனுப்பிய மெமோவில் இருந்து சில வரிகள்:
“I am committed to our first-party devices including phones. However, we need to focus our phone efforts in the near term while driving reinvention. We are moving from a strategy to grow a standalone phone business to a strategy to grow and create a vibrant Windows ecosystem that includes our first-party device family.”
ஸ்மார்ட்ஃபோன் வர்த்தகத்தில் எக்கோசிஸ்டம்தான் முதல் தேவை என்பதில் இப்போது தெளிவாக இருக்கிறது மைக்ரோசாஃப்ட். எப்படி?
சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் வரிசையாக அப்ளிகேஷன் நிறுவனங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்தது. Wunderlist,Acompl, Sunrise போன்ற iOS, ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் இப்போது மைக்ரோசாஃப்ட்-இடம். ஃபோன் பிஸினஸுக்காக தன்னை மேலும் பலப்படுத்தி வருவதற்கான சிக்னல் இது.
இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட்-ன் சமீபத்திய அப்ளிகேஷனான Tossup விண்டோஸ் ஃபோனுக்குக் கிடையாது. ஆப்பிள், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் மட்டுமே இருக்கிறது அந்த அப்ளிகேஷன். மைக்ரோசாஃப்ட்-ன் சொந்த ஒன்நோட், ஒன்டிரைவ் போன்ற அப்ளிகேஷன்களை இப்போது ஆண்ட்ராய்ட்-ல் இயங்கு சாம்சங் கேலக்ஸி S6 ஃபோனில் ப்ரி-இன்ஸ்டால் செய்து வாங்கமுடியும். அதற்காக சாம்சங்குடன் ஒப்பந்தமும் போட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இப்போது அப்ளிகேஷன் டெவலப்பர்களையும் ஆண்ட்ராய்டு, iOS-க்கு அப்ளிகேஷன்களை டெவலப் செய்யச் சொல்கிறது மைக்ரோசாஃப்ட்.
இன்னும் எக்ஸ்க்ளூசிவ்வான தகவல், மைக்ரோசாஃப்ட்-ன் Cortana பெர்சனல் டிஜிட்டல் அஸிஸ்டன்ட் iOS, ஆண்ட்ராய்டு ஃபோன், டேப்லட்களுக்கு வர இருப்பதுதான்.
ஜூலை 29-ம் தேதி உலகம் முழுக்க விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டம் விற்பனைக்கு வர இருக்கிறது. கம்ப்யூட்டர்கள், டேப்லட்கள், ஃபோன்கள் என அனைத்து சாதனங்களிலும் ஒருங்கிணைந்து இயங்கக்கூடியது இந்த ஆபரேட்டிங் சிஸ்டம். இனி, ஒரு அப்ளிகேஷன், கேம், சாஃப்ட்வேர் டெவெலப்பர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு தனித்தனியாக டெவலப் செய்யத் தேவையில்லை. ஒரே கோடிங்தான்! யூஸர் இன்ட்டர்ஃபேஸ் மட்டும் மாறுபடும். இது டெவலப்பர்களுக்கு வரப்பிரசாதம்!பின்னாலேயே ஹார்டுவேர் நிறுவனங்களும் வந்துவிடும்.
எனவே, விண்டோஸ் ஃபோன் வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் முழுமையாக கைவிடவில்லை. விண்டோஸ் 10 எனும் ஒரே ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் டெஸ்க்டாப், மொபைல், டேப்லட் என 3 கோல்களையும் போட இருக்கிறது மைக்ரோசாஃப்ட்.
Post a Comment Blogger Facebook