ஜூலை மாத இறுதியில், விண்டோஸ் 10 வர உள்ளது. உடனடியாக அனைவருக்கும் இது கிடைக்காது என்று தற்போதைய தகவல் கூறினாலும், படிப்படியாக அனைத்து விண்டோஸ் பயனாளர்களுக்கும் இது கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. நூறு கோடி பேர் விண்டோஸ் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அனைத்து சாதனங்களுக்கும் கொண்டு செல்லவே அது விரும்பும். அந்நிலையில், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்பாடு எந்த நிலையில் இருக்கும்? என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலையில், விண்டோஸ் 7, இதுவரை, எக்ஸ்பி தவிர வேறு எந்த விண்டோஸ் சிஸ்டமும் எட்டாத உயரத்தை எட்டியுள்ளது. ''நெட் அப்ளிகேஷன்ஸ்” என்னும் கண்காணிப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு, மொத்த கம்ப்யூட்டர்களில், 67.1 சதவீதத்தினை எட்டியுள்ளது. மூன்றில் இரண்டு பங்கினைக் காட்டிலும், சற்று அதிகமான எண்ணிக்கையில், விண்டோஸ் 7 இடம் பெற்றுள்ளது. சென்ற மே மாதத்தைக் காட்டிலும் பயன்பாடு 4% கூடுதலாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், விண்டோஸ் எக்ஸ்பி 76.2% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டதுதான், இதுவரை எந்த சிஸ்டமும் தாண்ட முடியாத சாதனையாகும். அடுத்தபடியாக, விண்டோஸ் 7 இந்த இடத்தினைப் பிடித்துள்ளது.
வரும், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விண்டோஸ் 7 சிஸ்டமும் ஓய்வு பெற உள்ளது. அதாவது, இது ஓய்வெடுக்க, இன்னும் 54 மாதங்களே உள்ளன. ஆனால், மைக்ரோசாப்ட் வேறு திட்டம் கொண்டுள்ளது. இந்த கால இடைவெளியில், விண்டோஸ் 7 சிஸ்டத்தை, மிகக் குறுகிய அளவிற்குக் கொண்டு செல்வதுதான் அதன் இலக்கு. அதனால்தான், விண்டோஸ் 7 பயன்படுத்துவோருக்கு விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாக வழங்க இருக்கிறது. விண்டோஸ் 7 பயன்படுத்தும் தனிநபர்கள், விண்டோஸ் 10க்கு மாறினாலும், நிறுவனங்கள் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள மிகவும் தயங்குவார்கள். இதற்குக் காரணம், பல அப்ளிகேஷன்களை, புதிய சிஸ்டத்திற்கேற்ற வகையில் மாற்றி எழுத வேண்டிய கட்டாயமாகும். கூடுதலாக, தங்கள் கம்ப்யூட்டர்களையும் புதியதாக மாற்ற வேண்டும். அல்லது அப்கிரேட் செய்திட வேண்டும்.
இதனை அடுத்து, விண்டோஸ் 8 / 8.1 சிஸ்டம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 17% ஆக உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி, பாதுகாப்பற்ற நிலையிலும், 15% கம்ப்யூட்டர்களில் இன்னும் இயங்கி வருகிறது. விண்டோஸ் விஸ்டா 1.62% கம்ப்யூட்டர்களில் உள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி, 2014ல் தான் கொண்டிருந்த 26.29% இடத்திலிருந்து இறங்கி, 11.98% பங்கினைக் கொண்டுள்ளது. இதன் முடிவும் விரைவில் நிகழ இருக்கிறது. ஆனால், இவை அனைத்தும் தங்கள் பங்கினை, விண்டோஸ் 10 தரப்படும்போது, பெரிய அளவில் இழந்துவிடும். ஏனென்றால், விண்டோஸ் 10 இலவசமாகத் தரப்பட உள்ளது. ஓராண்டுக்குள் மாறினால் தான் இலவசம் என்ற நிபந்தனையையும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. எனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதில், பயனாளர்களிடையே நிச்சயம் ஒரு வேகம் இருக்கும்.
இருந்தாலும், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 / 8.1 சிஸ்டங்களுக்கு அப்டேட் உறுதி செய்யப்பட்ட நாள் இன்னும் வெகு தூரத்தில் உள்ளதால், இவற்றைப் பயன்படுத்துவோரில் பலர், இவற்றிலேயே தொடரலாம். செக்யூரிட்டி அப்டேட் எனப்படும் பாதுகாப்பு கவசம் வழங்கும் பைல்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்ற உறுதி உள்ளது. விண்டோஸ் விஸ்டா 11.04.2017 வரையிலும், விண்டோஸ் 7, ஜனவரி 14, 2020 வரையிலும், விண்டோஸ் 8.1, அக்டோபர் 1, 2023 வரையிலும் தங்களுக்கான பாதுகாப்பு பைல்களைப் பெறும். மேலும், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன், விண்டோஸ் 10 சிஸ்டத்தின் அம்சங்களை ஒப்பிடுகையில், பெரும்பாலான வசதிகள், விண் 8லேயே உள்ளன. விண் 10 சிஸ்டத்தில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் வசதிகள் வேண்டுபவர்கள், விண் 10க்கு மாறிக் கொள்ள எண்ணலாம். மற்றவர்கள் விண் 8 லேயே தொடரலாம்.
Post a Comment Blogger Facebook