விண்டோஸ் 10 இயக்க முறைமை குறித்து புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களுடன் ஒப்பிட்டும், தனியாக இதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தொகுத்து, பதில்களுடன் இங்கு பார்க்கலாம்.
1.விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம், முன்பு விண்டோஸ் 7 ஓராண்டில், மொத்த கம்ப்யூட்டர்களில் 22% பங்கினைக் கொண்டது போல, பரவலாகப் பயன்பாட்டுக்கு வருமா? அல்லது அதனைக் காட்டிலும் கூடுதலான பங்கினைக் கொள்ளுமா?
நிச்சயமாக, விண்டோஸ் 7 சிஸ்டம் பெற்ற இடத்தைக் காட்டிலும் கூடுதலான பங்கினை விண்டோஸ் 10 பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணங்கள் மூன்று. முதலாவதாக, இலவசமாகத் தரப்படும் அப்கிரேட் வசதி. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் பலர் இது குறித்து ஆர்வம் காட்டியுள்ளனர். இரண்டாவதாக, கம்ப்யூட்டர் தானாகவே அப்டேட் செய்திடும் வசதியை இன்று அதிகமானவர்கள் இயக்கி வைத்துள்ளனர். விண்டோஸ் 7 வந்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும், இது மிக அதிகமாகவே உள்ளது. மூன்றாவதாக, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 10 சிஸ்டங்களிடையே காணப்படும்
இணைவான இயக்க தன்மை. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களிடையே காணப்பட்ட இந்த தன்மையைக் காட்டிலும் தற்போது இது அதிகமாகவே உணரப்படுகிறது.நிறுவனங்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஏற்றுக் கொள்வது, தொடக்கத்தில், முதல் ஆண்டில் மிகக் குறைவாகவே இருக்கும். பின்னர் இது அதிகரிக்கலாம். மேலும், மைக்ரோசாப்ட், இலவச அப்கிரேட் செயல்பாட்டினை ஓராண்டிற்குள் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது. இல்லை என்றால், அப்கிரேட் செய்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். எனவே, முதல் ஆண்டில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைக் காட்டிலும், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்குக் கூடுதலாகவே இருக்கும்.
2. ஏன் நிறுவனங்கள் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதை ஒத்தி போடுகின்றன?
பொதுவாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கு நிறுவனங்கள் சற்றுப் பொறுமையாகத்தான் தங்களை மாற்றிக் கொள்ளும். இயங்கிக் கொண்டிருக்கும் அடிப்படையில், தங்கள் நிறுவனச் செயல்பாடுகளுக்கென உருவாக்கப்பட்ட செயலிகளைப் புதியதாகத் திடீரென மாற்ற இயலாது. அப்படி மாற்றிக் கொண்ட பின்னர், அதன் இயக்கத்தில், அல்லது அதனை இயக்குபவர்களிடத்தில் ஒருங்கிணைப்பு இல்லை எனில், நிறுவனத்தில் செயல்பாடுகளை மேற்கொள்ள இயலாது. எனவே, ஓராண்டு காலம் பொறுத்த பின்னரே, நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிந்து இயங்க ஆரம்பிப்பார்கள். விண்டோஸ் 10 முற்றிலும் புதிய முறையில் பல விஷயங்களைத் தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படலாம். அது நல்லதும் கூட.
3.விண்டோஸ் 10, நிறுவனச் செயல்பாடுகளுக்கு உயர்ந்த ஒரு நிலையைத் தருமா? எந்த வகையில் அது இருக்கும்?
ஆம், இரண்டு விஷயங்களில், விண்டோஸ் 10 நிறுவனங்களுக்குக் கூடுதல் பயனுள்ளதாக அமையும். முதலாவது பாதுகாப்பு. பயோமெட்ரிக் முறையில் இயக்கத்தைத் தொடங்குவது மற்றும் ஹார்ட்வேர் பாதுகாப்பு என, பாதுகாப்பு வழிகள் சற்று அதிகமாகவே விண்டோஸ் 10ல் தரப்பட்டுள்ளன. அடுத்ததாக, குறைவான இடத்தை எடுத்துக் கொண்டு இயங்கும் வகையில், விண்டோஸ் 10 வடிவமைக்கப்பட்டுள்ளது, நிறுவனங்கள் விரும்பும் அம்சமாக இருக்கும். இவற்றைக் காட்டிலும், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான சப்போர்ட் காலம் முடியும் நாள் நெருங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பான விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, நிறுவனங்கள் மாறிக் கொள்ளும்.மேலும், நிறுவனங்கள், விண்டோஸ் 10 இயங்குவதற்கான ஹார்ட்வேர் தேவைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தயார் செய்திட வேண்டும். எனவே, சற்றுக் கால அவகாசம் எடுத்த பின்னரே, இவை மாற்றத்திற்கு உடன்படும் என எதிர்பார்க்கலாம்.
4.மைக்ரோசாப்ட், நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் இயக்கம் என்பதே தன் இலக்கு என்று அறிவித்துள்ளது. மொபைல் போன்களிலும் விண்டோஸ் 10 சிஸ்டத்தினைக் கொண்டு வருவதன் மூலம், இந்த இலக்கை அடைய முடியும் என நினைக்கிறது? இது சாத்தியப்படுமா?
இது சற்றுப் பொறுமையாகக் காத்திருந்து பதிலைத் தேடுவதற்கான கேள்வி. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். சிஸ்டங்களில் இயங்கும் புரோகிராம்களைத் தயாரிக்க இன்றும் உலகம் முழுவதும் பல நிறுவனங்களும், தனி நபர்களும் உள்ளனர். அந்த அளவிற்கு, மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் இயக்கத்திற்கு, புரோகிராமர்களைத் தயார் செய்திட வேண்டும். பயன்பாட்டுச் சந்தையில், விண்டோஸ் 10 இயக்கம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டால், பல புரோகிராமர்கள் இந்தப் பிரிவில் தாங்களாகவே, இயங்க முன்வருவார்கள். பயனாளர்களோ, புரோகிராம்கள் தங்கள் தேவைக்கு இருப்பதை உறுதி செய்து கொண்டால் தான், தங்கள் மொபைல் சாதனங்களில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை மேற்கொள்ளுவார்கள். கொடி அசைந்து காற்று வருமா? காற்றடித்து கொடி அசையுமா? என்பதனைப் போன்றதுதான் இது. மைக்ரோசாப்ட் இந்த சூழ்நிலையைச் சற்று சாதுர்யத்துடன் கையாண்டு, தன் இலக்கினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5.விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை முழுவதுமாக விட்டுவிட பலரும் இப்போது அவசரப்படுவார்களா? விண்டோஸ் 7க்கான சப்போர்ட் நாள் வரும் ஜனவரி 2020ல் முடியப் போவதால், எக்ஸ்பி மொத்தமாகத் தன் இடத்தை இழந்துவிடுமா?
“விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் இனி இல்லை” என்று மைக்ரோசாப்ட் அறிவித்த போது, அது போன்ற சூழ்நிலை வராது எனப் பலர் எதிர்பார்த்தனர். ஆனால், மைக்ரோசாப்ட் தன் நிலையில் உறுதியாக இருக்கிறது. எனவே, விண்டோஸ் 7 குறித்த இறுதி நாளைப் பயனாளர்கள் நிச்சயமாய் கவனத்தில் கொண்டு அதற்கான பணிகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக,விண்டோஸ் 7 பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்கள், அதிலேயே தொடர்ந்தால், 2019 ஆம் ஆண்டில், வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் செல்லும் ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்குவார்கள்.
6.மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயக்கத்திற்கு கட்டணம் இல்லை. இலவசம் என்று அறிவித்துள்ளதே. இது எவ்வளவு நாட்களுக்குத் தொடரும்? மைக்ரோசாப்ட் தன் வருமானத்திற்கு என்ன செய்திடும்?
நிச்சயம் தன் வருவாயை மைக்ரோசாப்ட் விட்டுக் கொடுக்காது. தன்னிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்ளும். நாம் வாங்கும் கம்ப்யூட்டரின் விலையிலேயே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான விலையும் இருக்கும்.ஆப்பரேட்டிங் சிஸ்டம், அதற்கான கட்டணம், பாதுகாப்பு பைல்கள் வழங்கல் போன்றவை எல்லாம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய நிர்வாகிகள் வந்த பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகும். இன்றைக்குத் தரப்படுகிற இலவச அப்கிரேட் என்றும் இருக்கும் என்று, அதனை ஒரு கொள்கை முடிவாக எடுத்துக் கொள்ள முடியாது. எதிர்கால இலக்குகளை அடைய மைக்ரோசாப்ட் வகுத்துள்ள ஒரு பெரிய திட்டத்தின் ஒருபரிமாணம் தான் இது. இது எப்படியோ, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் தந்துள்ள ஓராண்டு காலத்திற்குள் பெற்றுக் கொள்வது நல்லது. அச்சப்படுவோர், சில மாதங்கள் காத்திருந்து, பின்னர் பெற்றுக் கொள்ளலாம்.
Post a Comment Blogger Facebook