X2MLFm5.jpg?1

கடந்த சில ஆண்டுகளாக, 'செல்பி' எனப்படும் தம்படங்கள் எடுத்துக் கொள்வது வெறித்தனமாய்ப் பரவி வரும் பழக்கமாக உள்ளது. இதனாலேயே, எந்த ஒரு மொபைல் போனிலும் முன்பக்கமாய் ஒரு கேமரா இருப்பது அவசியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முன்பக்க கேமரா, அதன் மெகா பிக்ஸெல் தன்மை குறித்து அவசியம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன் வாங்குபவர்களும், செல்பி கேமரா குறித்து அறிந்த பின்னரே ஒன்றை வாங்குவது குறித்து முடிவு எடுக்கின்றனர். அதே சமயத்தில், செல்பி படம் எடுப்பது என்பது ஒருவித அச்சுறுத்தும் பழக்கமாக மாறி வருவதனையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்த பழக்கத்தை ஒட்டி நமக்கு வந்த தகவல்களை இங்கு காணலாம்.
 



செல்பி எடுத்ததால் மரணம்:

அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுக்கும் முயற்சியில் இரண்டு மீட்டர் உயரத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து உயிரை விட்டார். இது நடந்தது இந்தோனேஷியாவில் பாலி என்ற இடத்தில். இதே போன்ற இன்னொரு விபத்தில், 21 வயது நிரம்பிய ரஷ்ய பெண், பாதுகாப்பு அதிகாரி விட்டுச் சென்ற 9 எம்.எம் துப்பாக்கியுடன் செல்பி படம் எடுக்கையில், துப்பாக்கி வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது நடந்தது மாஸ்கோ நகரில்.
 



பிரபலமானவர்கள் செல்பி எடுக்க மறுக்கிறார்கள்:

மக்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலமானவர்கள் பலர், மற்றவர்களுடன் செல்பி படம் எடுக்க மறுப்பு தெரிவிப்பார்கள். அண்மையில் பாரிஸ் நகரில் ப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்ற போது, அவரின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர், தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து ஓடி அவரிடம் சென்று, இந்த நிகழ்வினை உங்களுடன் செல்பி எடுத்து பதிந்து வைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். பெடரர் அதிகக் கோபமுற்று, பாதுகாப்பில் இது ஒரு பெரிய குளறுபடி எனச் சத்தம் போட்டு தன் கோபத்தைக் காட்டினார். செல்பி படம் எடுக்க அனுமதிக்க முடியாது என கூக்குரலிட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில், சிகப்பு கம்பள வரவேற்பின் போது, செல்பி போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. இந்த விழாக் குழு தலைவர் இது பற்றிக் கூறுகையில், செல்பி போட்டோவில் ஒருவர் மிகக் கோரமாக காட்சி அளிக்க வாய்ப்புண்டு என்றுரைத்தார். செல்பி எடுக்க விதிக்கப்பட்ட தடை சரியே என்று வாதிட்டார். நிகழ்ச்சிக்குப் பொருந்தாத செயல் என்றும் குறிப்பிட்டார். 
 



தவறான இடத்தில் தவறான போட்டோ:

6ebP8fe.jpg




2013 ஆம் ஆண்டில், டானிஷ் பிரதமர் ஹெல் தார்னிங், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நெல்சன் மண்டேலாவிற்கான நினைவு நிகழ்ச்சி ஒன்றில், செல்பி எடுப்பது குறித்த விஷயம் குறித்துப் பல முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்தனர். டேனிஷ் பிரதமர் (பெண்) அவருடைய ஸ்மார்ட் போனில் ஒரு செல்பி எடுத்தார். அந்த போட்டோவில், ஒபாமா மற்றும் கேமரூன் இரு புறமும் இருந்தனர். ஆனால், அது தகுதிக்குக் குறைவான செயல், ஒழுக்கம் குறைவதன் அறிகுறி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் வீழ்ச்சி என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர். 
 



போட்டோவினால் விபத்து:

சென்ற ஆண்டில், செல்பி படங்கள் ஒரு விமான விபத்திற்குக் காரணமாய் அமைந்தது. கொலரடோவில் டென்வர் நகர் அருகே, அம்ரித் பால் சிங் என்பவர் தன்னையே செல்பி படம் எடுத்தார். அப்போது அவர் ஒரு விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பட்ட ப்ளாஷ் வெளிச்சம் அவருடைய கவனத்தைச் சிதறடித்து, விபத்தை ஏற்படுத்தியது என National Transportation Safety Board அமைப்பு இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்தது. வெளிச்சத்தினால் கவனம் சிதறிய விமானம் தரையில் மோதியது. சிங் மற்றும் ஒரு இந்திய பயணி இதில் மரணமுற்றனர். இந்தப் பயணி ஓர் இசைக் கலைஞர் ஆவார். 
 



சரித்திர நினைவுச் சின்னம் அழிந்தது:

சென்ற மே மாதம், இத்தாலியில், கிரிமோனா நகரில் மியூசியம் ஒன்றில், அங்கிருந்த நினைவுச் சிலை ஒன்றுடன் செல்பி போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின் எடை தாங்காமல், சிலையின் கிரீடத்தின் ஒரு பகுதி உடைந்தது. 
 

சென்ற மார்ச் மாதம், கலிபோர்னியாவிலிருந்து வந்த இரு பெண்கள், ரோம் நகரில் உள்ள கொலாசியத்தில், தங்கள் பெயரின் முன் எழுத்துகளைச் செதுக்கி பின் அவை தெரியும் வகையில் செல்பி எடுத்தனர். அங்கிருந்த பழங்காலச் சிலை புதிய எழுத்துகளால், தன் புகழை இழந்தது தான் மிச்சம்..

Post a Comment Blogger

 
Top