LXGUC4e.jpg

ஆண்டுதோறும், புதிய டிஜிட்டல் சாதனங்களை அறிமுகம் செய்திடும் “நுகர்வோர் டிஜிட்டல் சாதனங்கள்” (Consumer Electronics Show) உலக அளவில் நடைபெறுவதுண்டு. இந்த ஆண்டு, சென்ற வாரத்தில், அமெரிக்காவில், லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்றது. உலகில் இயங்கும் பல முன்னணி நிறுவனங்கள், மைக்ரோசாப்ட் உட்பட, இதில் கலந்து கொண்டு தங்களின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்தனர். நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தேவைகளின் அடிப்படையில் புதிய சாதனங்கள் அமைந்திருந்தன. தேவைகளுக்கான தீர்வுகளாய் அவை இருந்தது மட்டுமின்றி, நம் வாழ்க்கையின் அடுத்த முன்னேறிய நிலைகளை அவை காட்டுவதாய் அமைந்திருந்தன.


இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சி, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக ஆரவாரமும், மின் மினுப்பும் கொண்டு கலகலத்தது. இவ்வளவுதான் என்று வரையறுத்துக் கூற முடியாத அளவிலான வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், சின்ன கிராமங்களுக்கும் மேலான அளவில் அமைந்த நிறுவனங்களின் காட்சிக் கூடாரங்கள், வாடிக்கையாளர்களை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளம்பரங்கள், காட்சிகள் என அனைத்து வகைகளிலும் சிறப்பாக இருந்தது. சென்ற ஆண்டுகளிலும் இதே ஆரவாரம் இருந்தாலும், காட்சிக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள் தந்த நிறைவு மனதளவில் நிலைக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு காட்டப்பட்ட சாதனங்கள், நம் எதிர்காலத்தில் இவை எல்லாம் நம் உடன் வந்து வாழ்க்கையை எளிதாக்கப் போகின்றன என்ற உறுதியைத் தந்தன. அந்த வகையில் வாழ்க்கைக்குத தேவையான சாதனங்கள் தந்த செய்திகளைக் காணலாம்.



உடல்நலம் பேணும் சாதனங்கள்:


2015 ஆம் ஆண்டில் நாம் நம் கரங்களிலேயே நம் உடல்நிலையைக் காட்டும், அதனைப் பேணிப் பாதுகாக்கும் சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்தும் சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. ஏற்கனவே, உடல்நிலை காட்டும் கை வளையங்கள் (fitness bands), செறி திறன் கொண்ட கடிகாரங்கள் (smart watches) புழக்கத்தில் உள்ளன. இவற்றில் கூடுதல் வசதிகளுடன் கூடியவற்றை இந்த கண்காட்சியில் காண முடிந்தது. இவற்றுடன், புதியதாக, செவித்திறன் குறைந்தவர்களுக்கான சாதனங்களை முதன் முதலாகக் காண முடிந்தது. இவை புளுடூத் உதவியுடன் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பி.சி.களுடன் இணைந்து கொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. குழந்தைகளின் உடல் சூட்டினைக் காட்ட கரங்களின் துணையின்றி பயன்படுத்தக் கூடிய சாதனங்கள், எந்த அளவிற்கு சூரிய ஒளியில் இன்னும் குழந்தைகளைக் காட்டலாம் என்ற மானிட்டர், நம்மை விளையாட வைத்து நம் முதுகின் வளையும் தன்மையைச் சரிப் படுத்தும் சாதனம் என இந்த சாதனங்களின் வரிசை நீள்கிறது.



சுற்றுப் புறச் சூழ்நிலை மற்றும் புவிப் பசுமை காத்தல்: 

நம் அலுவலகம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் சாதனங்களுக்கு, இயற்கையிலிருந்து சக்தியைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாதனங்கள் பல அறிமுகமாயுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின் சக்தி தயாரித்து வழங்கக் கூடிய பாக்கெட் அளவிலான சாதனங்கள் வந்துள்ளன. 9-0 நிமிடங்கள் சூரிய ஒளியில் இதனை வைத்து எடுத்தால், நம் மொபைல் போன் நாள் முழுவதும் பயன்படுத்தக் கூடிய மின் சக்தியினைத் தருகிறது. ஐபோனை வைத்து எடுத்துச் செல்லும் ஷெல் ஒன்றில், இத்தகைய சோலார் தொழில் நுட்பம் இணைத்துத் தரப்பட்டு, போனுக்கான மின் சக்தி தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
இந்த வகையில் பெரிய சாதனங்களும் உள்ளன. எலக்ட்ரிக் சக்தியில் மட்டுமே ஓடும் ஸ்போர்ட்ஸ் யுடிலிடி கார் மாடல் ஒன்று அனைவரையும் கவர்வதாக உள்ளது.இதன் கதவுகள் திறக்கும் தொழில் நுட்பம் இதுவரை நாம் காணாத ஒன்றாகும். தற்போதைய மோட்டார் சைக்கிள்களுக்கு எலக்ட்ரிக் சக்தியை வழங்கி இயக்கவைக்கும் சாதனம் ஒன்று பழமையையும் புதுமையையும் இணைக்கும் வாகன சாதனமாக இருந்தது. என்.எப்.சி. தொழில் நுட்பம் இணைந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சாவிகள், அசைவிலேயே ஸ்கூட்டர்களை ஸ்டார்ட் செய்தன.


தொழில் நுட்பத்தைக் குழந்தைகள் கற்க சாதனங்கள்:


அறிவியலையும், தொழில் நுட்பத்தினையும் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொள்ள, கற்பனைத் திறனையும் தொழில் நுட்பத்தையும் கலந்து உருவாக்கப்பட்ட பல சாதனங்கள், இந்த கண்காட்சியின் சிறப்பான அம்சங்களாக இருந்தன. சிறுவர்கள் அறிவியல், கணக்கு மற்றும் தொழில் நுட்பக் கூறுகளைக் கற்றுக் கொள்ள இவை உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் புரோகிராமிங் அடிப்படையைக் கற்றுத் தரும் சிறிய இயந்திர மனிதர்களையும் இந்த கண்காட்சி அறிமுகப்படுத்தியது. Ozobot என்னும் சாதனம், டிராயிங்,டிசைன் மற்றும் வண்ண காட்சிகளைப் பயன்படுத்தி குழந்தைகள் ரோபாடிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் வழிகளைக் கற்றுக் கொள்ள உதவுகிறது.


பல தொழில் நுட்ப திட்டங்கள்:


பல நிறுவனங்கள் தங்கள் தொழில் நுட்ப திட்டங்களை விளக்கமாக அளித்தன. இவற்றில் முப்பரிமாண அச்சுப் பொறிகள் ஏராளமாய் இருந்தன. இதே அடிப்படையில் அறிமுகமான Scio scanner என்னும் சாதனத்தை மக்கள் பயன்படுத்தி, உணவுப் பண்டங்களையும்,மருந்துகளையும் ஸ்கேன் செய்து, அவற்றின் ஊட்டச்சத்து விகிதம் மற்றும் மருந்துகளில் உள்ள இரசாயனக் கலப்பினையும் கண்டறியலாம்.

இந்த ஆண்டு Eureka Park என்று அழைக்கப்பட்ட வளாகத்தில், 300 நிறுவனங்களுக்கு மேல் இடம் பெற்றிருந்தன. சென்ற ஆண்டில் இதில் 200நிறுவனங்களே இடம் பெற்றிருந்தன. இவை பொதுமக்களுக்கான பொதுவான பல சாதனங்களைக் காட்சிக்குக் கொண்டிருந்தன. இங்கு காட்சி வைக்கப்பட்டிருந்த சில சாதனங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவற்றைக் காட்டியுள்ள நிறுவனங்களும் குறிப்பிடத்தக்கவையே. அந்த வகையில் கீழே தரப்பட்டுள்ள சாதனங்கள் முக்கியமானவை ஆகும்.



மைக்ரோசாப்ட்:


இந்த ஆண்டு கண்காட்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதன் நோக்கியா 215 போன் இதில் அனைவரையும் கவர்ந்தது. மலிவான விலையில் அமைந்த இன்டர்நெட் ரெடி மொபைல் போன் இது. வரிகள் ஏதும் இல்லாமல் இதன் அடிப்படை விலை 29 டாலர். இதில் பேஸ்புக், மெசஞ்சர், பிங் தேடல் வசதி, ட்விட்டர் மற்றும் ஆப்பரா மினி பிரவுசர் ஆகியவை பதியப்பட்டு தரப்படுகின்றன. 2.4 அங்குல QVGA எல்.சி.டி. திரை, 8 எம்.பி. ராம் நினைவகம், புளுடூத் மற்றும் எப்.எம். ரேடியோ ஆகியவை மற்ற வசதிகள். இதன் முன்புறக் கேமரா 0.3 மெகா பிக்ஸெல் சென்சார் கொண்டு அமைக்கப்பட்டதாக உள்ளது.

அசைவுகளைப் பயன்படுத்தி மொபைல் போன்களை இயக்குவது இன்றைக்கு பரவலாகப் பல போன்களில் இயங்கி வருகிறது. இதில் ஒரு படி முன்னேறிய தொழில் நுட்பம் கொண்டதாக, எல்லிப்டிக் லேப்ஸ் என்ற நிறுவனம் போன் ஒன்றைக் காட்டியுள்ளது. இதில் "Multi Layer Interaction" என்ற தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் ஒன்றின் முன்னால், எவ்வளவு தூரத்தில், எதனை நோக்கி,அதனைப் பயன்படுத்துபவர் விரல் உள்ளது என்ற அடிப்படையில் போன் இயங்குகிறது. எடுத்துக் காட்டாக, ஸ்மார்ட் போன் ஒன்றில்,விடீயோ ஒன்றைக் கவனிக்கும்போது, நாம் நம் கரத்தினைக் கொண்டு சென்றால், கட்டுப்பாட்டிற்கான பட்டன்கள் காட்டப்படுகின்றன. இதன் மூலம், வீடியோ இன்னும் எவ்வளவு நேரம் இயங்கும் என்பதை அறியலாம். திரைத் தோற்றத்தைத் தெளிவாக வைத்துக் கொண்டே,வீடியோவினை முன்புறமாகவும், பின்புறமாகவும் வேகமாக இயக்கலாம்.


ஏசர் நிறுவனத்தின் புதிய கம்ப்யூட்டர்:

இது போன்ற கண்காட்சிகளை, ஏசர் நிறுவனம் எப்போதும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும். முதன் முதலாக 15.6 அங்குல திரை கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டரை இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. Chromebook 15 என இது பெயரிடப்பட்டுள்ளது. Intel Core i3 அல்லது Intel Celeron ப்ராசசர்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் திரை முழுமையான எச்.டி. டிஸ்பிளே, 1920x1080 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்டதாக உள்ளது. குறைவான விலைக்கு வேண்டும் என்றால், ரெசல்யூசன் சற்று குறைவாகக் கொண்ட லேப்டாப் கிடைக்கிறது. ராம் மெமரியும் 2 மற்றும் 4 ஜி.பி. கொண்டதாக இரு மாடல்கள் உள்ளன. இதன் விலை 250 டாலர்.



ஸீகேட் தரும் புதிய ட்ரைவ்:


 இந்தக் கண்காட்சியில், ஸீ கேட் நிறுவனத்தின் புதிய ஹார்ட் டிஸ்க்குகள் மக்களைக் கவர்ந்தன. அவற்றில், மிக மிகக் குறைவான தடிமனில் வடிவமைக்கப்பட்ட போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. 7 மில்லி மீட்டர் தடிமனில், ஸ்டீல் ட்ரேயில் அமைக்கப்பட்டு இது கிடைக்கிறது. இதன் எடை 90 கிராம் மட்டுமே. இதுதான் உண்மையிலேயே எளிதில் எடுத்துச் செல்லும் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவாக உள்ளது என்று கண்காட்சிக்கு வந்த பலர் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் அளவு 500 ஜி.பி. விலை 100 டாலர். ஸீகேட் நிறுவனம், வயர் இணைப்பு எதுவுமின்றி இயங்கும் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவினையும் காட்சிக்குக் கொண்டு வந்தது. யு.எஸ்.பி. கேபிள் எதுவுமின்றி இதனை இயக்கலாம். இதன் விலை 120 டாலர்.



திறன் கூடிய சைக்கிள்:



 உடல் நலம் பேணுபவர்கள் இப்போது அதிகமாக சைக்கிள்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனைப் பயன்படுத்தி ஸ்மார்ட் சைக்கிள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெடலில் அமைக்கப்பட்டுள்ள சென்சார், இதன் போக்குவரத்தைக் காட்டுகிறது. பெடலில் GPSமற்றும் GPRS சென்சார்கள் தரப்பட்டுள்ளன. இதனுடன் இணைக்கப்பட்ட அப்ளிகேஷனுக்கு, இந்த பெடல், இந்த சைக்கிளை ஓட்டுபவரின் உடல்நலக் கூறுகள் மற்றும் அந்த சைக்கிள் செல்லும் இடங்கள் குறித்து தகவல்களை அனுப்புகிறது. எனவே, இது திருடு போனால், மிக எளிதாக எங்கு உள்ளது எனக் கண்டறியலாம்.


எச்.பி.யின் மிகச் சிறிய கம்ப்யூட்டர்:


 சி.பி.யு. டவர் என்ற கோபுரத்துடன் கம்ப்யூட்டரை எண்ணிப் பார்ப்பவர்களுக்கு, 2.06 அங்குல உயரத்தில் 725 கிராம் எடையில் கம்ப்யூட்டர் தருகிறது எச்.பி.நிறுவனம். HP Pavilion Mini Desktop மற்றும் HP Stream Mini Desktop என இரண்டு மாடல்கள் வருகின்றன. இண்டெல் கோர் ஐ3ப்ராசசர், விண்டோஸ் 8.1 சிஸ்டம், 1 டெரா பைட் ஸ்டோரேஜ், 8 ஜி.பி. ராம் என இந்த சித்திரக் குள்ளன் கம்ப்யூட்டர் களை கட்டுகிறது. இதனை வாங்குபவர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவில் இரண்டு ஆண்டுகளுக்கு 200 ஜி.பி. ஸ்டோரேஜ் இடம் இலவசமாகத் தரப்படுகிறது. இதன் விலை 180 மற்றும் 320 டாலராக இருக்கும்.

சோனி நிறுவனம் தன் புதிய வாக்மேன் சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. Walkman ZX2 என அழைக்கப்படும் இதன் விலை 1120டாலர். மிக அதிகமாக விலையிடப்பட்டுள்ளதால், நிச்சயம் ஆச்சரியப்படத்தக்க வசதிகளும், தன்மையும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். நிச்சயமாக சோனி நிறுவனத்தின் S-Master HX digital amplifier இருக்கும். இதன் ஸ்டோரேஜ் 128 ஜி.பி. வயர்லெஸ் ஆடியோவுடன் இயங்குகிறது. குழந்தைகள் மின்சாரம் வழங்கும் ப்ளக் அருகே சென்றால், தானாக இயங்கி, மின்சக்தியை நிறுத்தும் Brio Safe Outlet இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. சரியாகச் சொல்வதென்றால், சரியான ப்ளக் இணைக்கப்பட்டால் மட்டுமே, இதிலிருந்து மின்சக்தி கிடைக்கும்.

மொபைல் தொழில் நுட்பம் மூலம், உடல் வலியைக் குறைக்கலாம் என்று NeuroMetrix நிறுவனம் எண்ணி, அதற்கான சாதனம் ஒன்றை வடிவமைத்து காட்டியுள்ளது. இதனைக் கைகளில் அணிந்து கொள்ளலாம். மூட்டு வலி, நரம்பு கோளாறுகளால் வரும் வலி போன்றவற்றை இது குணப்படுத்துகிறது. "Non-invasive neurostimulation technology" என்னும் நரம்புகளைத் தூண்டி குணப்படுத்தும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. இதனை நம் ஸ்மார்ட் போனுடன் தொடர்பு படுத்தி, நம் வலி மற்றும் பயன்பாட்டினை அறிந்து கொள்ளலாம்.

சிகரெட் பழக்கத்தினைக் குறைக்க சில தகவல்களை தந்து மிரட்டுகிறது Quitbit என்னும் சாதனம். அடிப்படையில் இது ஒரு சிகரெட் லைட்டர். நீங்கள் எத்தனை முறை இதனைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதன் மூலம், எத்தனை சிகரெட்கள் புகைக்கிறீர்கள் என்று கணக்கிடுகிறது. நாம் முன்பே நமக்கென ஓர் அளவினை நிர்ணயம் செய்து கொண்டால், அந்த அளவு வந்த பின்னர், எச்சரிக்கை கொடுத்து,பற்றவைக்க மறுக்கிறது. விலை 100 டாலர்.

மேலே காட்டப்பட்டுள்ளவை மிகச் சிலவே. இன்னும் அதிகமான எண்ணிக்கையில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பல சாதனங்கள் இந்தக் கண் காட்சியில் பார்வைக்கு இருந்தன. நிச்சயம் இந்த ஆண்டில் நம் பயன்பாட்டிற்கு அவை வரும் என்று எதிர்பார்ப்போம்.

Post a Comment Blogger

 
Top