wGrOW79.jpg


ஆண்டுதோறும் தன் கட்டமைப்பில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது, பெரிய அளவில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் கருத்தரங்கினை இரு வாரங்களுக்கு முன்னர் சான்பிரான்சிஸ்கோவில் நடத்தியது. அப்போது தன் புதிய செயலிகளையும், அவற்றிற்கான கட்டமைப்பினையும், அவை வழங்கக் கூடிய நவீன வசதிகளையும் வெளிப்படுத்தியது. ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஐ.ஓ.எஸ்.9, மேக் கம்ப்யூட்டர்களுக்கான ஓ.எஸ். எக்ஸ் அப்டேட் கேபிதான் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஓ.எஸ். 2 ஆகியவை குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.



ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஐ.ஓ.எஸ். 9(iOS 9): 


இந்தக் கருத்தரங்கில் மிகப் பெரிய வெளிப்பாடாகக் கருதப்பட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களுக்கான அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். இது iOS9 என அழைக்கப்படுகிறது. இதில் புதியதாகப் பல அம்சங்கள் தரப்பட்டுள்ளன. அவை


சிரி (Siri) செயலியில் முன்னேற்றம்:


'சிரி' என்பது ஆப்பிள் ஐபோன் 4எஸ் மற்றும் புதியதாக வந்துள்ள ஐபேட் மற்றும் ஐபாட் ஆகிய சாதனங்களில் ஒருங்கிணைந்து செயலாற்றும் ஓர் “அறிவுபூர்வமான உதவியாளன்” எனக் கூறலாம். நாம் நம் ஒலி வழிக் கட்டளைகளை வழங்கி இந்த மொபைல் சாதனங்களையும் அதன் செயலிகளையும் இயக்கலாம். இதற்கு அடிப்படையில் அமைந்திருப்பது 'சிரி' செயலியாகும். பல புதிய உத்திகளும் வசதிகளும் இதற்கென ஐ.ஓ.எஸ்.9ல் தரப்பட்டுள்ளன. தர்ட் பார்ட்டி சப்போர்ட் கொண்டு தேடுதல் பணியும் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி “கூகுள் நவ்” மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய “கார்டனா” சாதனத்திற்கு போட்டியாக இயங்கும்.



 (Caller Id): 

உங்களுடைய ஐபோன் இனி உங்கள் மின் அஞ்சல் தொடர்புகளை ஆய்வு செய்து, தொலைபேசியில் அழைப்பது யார் எனக் காட்டும். திரையிலேயே இது யாரிடமிருந்து வந்திருக்கலாம் என அறிவிக்கும். 



ஆப்பிள் 'பே':


 நாம் பணம் செலுத்தி பொருட்கள் வாங்கியவுடன், அது குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதற்கு பரிசாக ஏதேனும் 'reward card'வழங்கப்பட்டால் அவை நம் போனில் பாதுகாக்கப்படும். இந்த வகையில் இந்த தள்ளுபடி மற்றும் பரிசு தகவல்கள் சேகரிக்கப்பட்டு நம் பயன்பாட்டிற்குத் தயாராய் வைக்கப்படும். பின்னர், சரியான விற்பனை மையத்தில் பயன்படுத்தக் கூடிய இந்த பரிசுக் கூப்பன்களை வெளிப்படுத்தி, அவற்றைக் காசாக்க உதவும்.



வாலட் (Wallet):


இந்த வசதிக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.



கீ போர்ட்:

தன் சாப்ட்வேர் கீ போர்டினை, ஆப்பிள், ஐ.ஓ.எஸ்.9ல் விரிவுபடுத்தியுள்ளது. இதனை QuickType என அழைக்கிறது. ஒரு டூல் பார் மூலம் Cut, copy and paste செயல்பாடுகள் தரப்படுகின்றன. 



மேப் மேம்பாடு:

ஆப்பிள் தரும் மேப் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. "Transit," என்ற பெயரில் இனி, சிறிய அளவிலான வழிகள் மற்றும் பொது பயணிகள் வாகனங்கள் குறித்த தகவல்கள் காட்டப்படும். மேப்களிலேயே, ட்ரெயின் மற்றும் பஸ் பயணங்கள் குறித்த தகவல்கள் இணைக்கப்படும் எங்கு எப்போது நடந்து செல்லலாம் என்றும், குறுக்காகச் செல்லும் பாதைகளையும் இனி மேப் வழி காட்டும். Restaurants, Groceries, Bakeries என்ற வகைகளிலும் தேடலை மேற்கொள்ளலாம். 


செய்திகள் (News): 


இது ஒரு புதிய செயலி. தனிப்பட்ட முறையில் செய்திகள் தொகுக்கப்பட்டு கிடைக்கும். தற்போதைக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளிலிருந்து வெளியாகும் இதழ்களுடன் இதற்கென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இனி மற்ற நாடுகளில் பிரசுரிக்கப்படும் செய்தித் தாள்களும் ஒருங்கிணைக்கப்படும். இவற்றிலிருந்து ஐ போன் பயனாளரின் தேடுதல் மற்றும் விருப்பங்களுக்கேற்ப தகவல்கள் தரப்படும்.



நோட்ஸ் (Notes):

இந்த புதிய சிஸ்டத்தில், நோட்ஸ், ஏறத்தாழ நோட்பேட் அளவிற்கு புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளது. புதிய டூல் பார் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் மூலம், போட்டோ இணைப்பு, டெக்ஸ்ட் பார்மட்டிங், புல்லட் வரிசை ஆகியவற்றை உருவாக்கலாம். நாமே வரையும் படங்களை, குறிப்புடன் இணைக்கலாம். 



செயல்பாடும் பேட்டரியும் (performance and battery): 


புதிய மொபைல் செயலியான ஐ.ஓ.எஸ். 9, இதுவரை செயல்பட்ட இயக்க முறைமைத் தொகுப்புகளைக் காட்டிலும் 40% கூடுதலான வேகத்தில் செயல்படும். பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கும் திறனும் அளிக்கப்பட்டுள்ளது. 



ஐபேட்: 

புதிய ஐ.ஓ.எஸ்.9 செயலியில், ஐபேட் சாதனங்கள் சிறப்பு கவனத்துடன் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் கீ போர்ட் அமைப்பு மேம்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளும் வசதி கூடுதல் அமைப்பினைப் பெறுகிறது. "slide-over" என்ற பெயரில், திரை பிரிக்கப்பட்டு, வேறுபட்ட செயல்பாடுகளை இவற்றில் மேற்கொள்ளலாம். இரண்டு அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்கலாம்.

ஒரே நேரத்தில் இரு பணிகளைத் தருவதில் இன்னொரு வகையும் மேற்கொள்ளப்பட உள்ளது. இது படங்களைச் சார்ந்ததாகும். ஒரு படம் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னொன்றை இயக்கினால், ஏற்கனவே பார்த்துக் கொண்டிருப்பது சிறிய கட்டத்தில் காட்டப்பட்டு, புதிய படம் பெரியதாகக் காட்டப்படும். பின்னர், இந்த இரண்டினையும் கட்டம் மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே ஐ.ஓ.எஸ். 8 இயங்கிய அனைத்து சாதனங்களிலும், ஐ.ஓ.எஸ். 9 இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஐ.ஓ.எஸ். 9, செயலிகளை உருவாக்குபவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் பொதுமக்களுக்கான சோதனைத் தொகுப்பு வழங்கப்படும். பின்னர், இது ஐபோன் 4 எஸ் மற்றும் ஐபேட் 2 சாதனங்கள் தொடங்கி, அதன் பின்னர் அறிமுகமான சாதனங்களுக்கு இலவசமாகத் தரப்படும்.


பொதுவாக மொபைல் போன்களுக்கென செயலிகளை உருவாக்குபவர்கள், ஆப்பிள் சாதனங்களுக்குத்தான் முதலில் உருவாக்குவார்கள். பின்னரே, ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்குச் செல்வார்கள். ஏனென்றால், ஆப்பிள் நிறுவனம் தான் அதிக பணம் வழங்குகிறது. (அண்மைக் காலத்தில் தான், இந்த வருமானம் தருவதில், ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பெற்றது) 

மேலும், ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எனில், அதில் ஒரே வகைதான் இருக்கும். தங்கள் அப்ளிகேஷன்களைச் சோதனை செய்து பார்ப்பது எளிது. ஆனால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் பல வகைகள் உள்ளன. எனவே, அவை அனைத்திலும் சோதனை செய்து பார்ப்பது சற்று அதிக காலம் எடுக்கும் செயலாகும்.

இந்த ஆண்டு பயனாளர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சென்ற முறை, ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்திடத் தேவையான காலி இடம் 4.6 ஜி.பி. ஆக இருந்தது. இம்முறை, ஐ.ஓ.எஸ்.9க்கு, காலி இடம் 1.8 ஜி.பி. போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேக் கம்ப்யூட்டர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓ.எஸ்.எக்ஸ் 10.11 (El Capitan)ல் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ட்ரேக் பேடில், கர்சர் இருக்கும் இடத்தை, விரல் அசைவில் தெரிந்து கொள்ளலாம். சபாரி பிரவுசர், ஸ்பாட் லைட் தேடல் ஆகியவையும் மேம்பாடடைந்துள்ளன. 

ஆப்பிள் நிறுவனத்தின் கேம் அப்ளிகேஷன் மெட்டல் (Metal) பல புதிய பரிணாமங்களைப் பெறுகிறது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தினைச் செயல்படுத்துவதில், 50% கூடுதலான வேகத்தில் இது இயங்கும். கேம்ஸ் உருவாக்கும் பல நிறுவனங்கள் ஏற்கனவே இந்த கட்டமைப்பிற்கு ஏற்ற வகையில், தங்கள் படைப்புகளை உருவாக்கி வருகின்றன.

இவற்றுடன் ஆப்பிள் வாட்ச் சிஸ்டம் இணைந்து மேம்படுத்தப்படுகிறது. WatchOS 2 வெளியிடப்படுகிறது. கடிகாரத்தின் முகப்பு பக்கத்தில் போட்டோக்கள், போட்டோ ஆல்பம் ஆகியவற்றை இனி இணைக்கலாம். செயலிகள் அனைத்தும் வேகமாக, கூடுதல் சிறப்புடன் இயங்கும் வகையில் மேம்படுத்தப்படுகின்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாலட் மற்றும் மேப் ட்ரான்ஸிட் செயல்பாடுகள், ஆப்பிள் வாட்ச் சாதனங்களிலும் இயங்கும். இவற்றை வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தலாம். 

இது போல, ஆப்பிள் சாதனங்கள் அனைத்திலும் பல புதிய நவீன வசதிகளும், மேம்படுத்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment Blogger

 
Top