சென்ற மே மாத இறுதியில், கூகுள் தன் வடிவமைப்புப் பொறியாளர்களுக்கான கருத்தரங்கினை, சான்பிரான்சிஸ்கோ நகரில் நடத்தியது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில், கூகுள் தன் புதிய தொழில் நுட்ப வடிவமைப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடும். இது அக்கட்டமைப்பில் இயங்கும் அப்ளிகேஷன்களைத் தயாரிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தரும். மக்களுக்கு, அவற்றின் வசதிகள் தெரிவதால், மகிழ்ச்சியைத் தரும். இந்த ஆண்டில் கூகுள் அறிவித்த புதிய தொழில் நுட்ப திருப்பங்களை இங்கு காணலாம்.
ஆண்ட்ராய்ட் எம் ~ மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்:
கூகுள் நிறுவனத்தின் மிகச் சிறந்த படைப்பாக ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. 400க்கும் மேற்பட்ட மொபைல் போன் மற்றும் டேப்ளட் தயாரிக்கும் நிறுவனங்கள், கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தாங்கள் வடி வமைக்கும் சாதனங்களின் இயக்க முறைமையாகத் தருகின்றனர். 500 மொபைல் சேவை நிறுவனங்கள் இதனைத் தாங்கள் தரும் மொபைல் போன்களில் பதிந்து இயக்குகின்றனர். அணிந்து இயக்கும் சாதனங்களிலும், வாகனங்களிலும் (Android Wear and Android Auto) இந்த இயக்க முறைமை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட Android Television என்னும் சிஸ்டமும் தொடர்ந்து பல வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது.
இப்போது புதியதாக 'ஆண்ட்ராய்ட் எம்' என்னும் இயக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்ட் இயக்க வாடிக்கையாளர்களின் அனுபவத்தினை இன்னும் சிறப்பாக அமைத்திடும் வகையில் இதனை வடிவமைத்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. புதியதாக ஆறு வசதிகள் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. செயலிகளுக்கான அனுமதி, இணைய உலா அனுபவம், செயலிகளுக்கான தொடர்பு, மொபைல் வழி பண பரிமாற்றம், விரல் ரேகை வழி இயக்கம் மற்றும் மின்சக்தி கடத்தல் என அவை விரிகின்றன.
பயனாளர்கள் விரும்பினாலே செயலிகளுக்கான அனுமதி தரப்பட்டு அவை இயங்கும். இணைய அனுபவத்தினைச் சிறப்பாக்க, டேப்கள் புதிய முறையில் வழங்கப்பட உள்ளன. செயலிகள் எப்படி எங்கு இயங்க வேண்டும் என்பதனையும் பயனாளர்களே முடிவு செய்து இயக்கலாம். ஏற்கனவே உள்ள “ஆண்ட்ராய்ட் பே (Android Pay)” இடத்தில் மொபைல் பேமெண்ட் இடம் பெறும். இதில் விரல் ரேகை ஸ்கேன் செய்திடும் வசதி கூடுதலாகத் தரப்படுகிறது. மொபைல் சாதனங்களில், மின் சக்தி பயன்பாட்டில் புதிய வகை மேலாண்மை தரப்படுகிறது. இறுதியாக எப்போது மொபைல் சாதனம் பயன்படுத்தப்பட்டது என அறியும் வசதி இணைகிறது. ஒரு சாதனம் நகர்த்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு, குறிப்பிட்ட கால அளவில், அது நகர்த்தப்படவில்லை என்றால், அந்த சாதனத்தில் பின்னணியில் இயங்கும் செயலிகளின் இயக்கம் நிறுத்தப்படும். இதனால் “ஸ்டேண்ட் பை (Standby mode)” நிலையில், கூடுதலாக இரண்டு மடங்கு நேரம் மின் சக்தி தங்கும். சார்ஜ் செய்வதற்கு இனி யு.எஸ்.பி. “சி” வகை பயன்படுத்தப்படும்.
கட்டற்ற பதிவுடன் கூகுள் போட்டோஸ்:
தன்னுடைய டெவலப்பர் கருத்தரங்கில், கூகுள் நிறுவனம், “கூகுள் போட்டோஸ்” என்ற புதிய அப்ளிகேஷன் மற்றும் இணைய தளம் குறித்து அறிவித்துள்ளது. இந்த தளம், நாம் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் விடியோக்களைப் பதிந்து வைத்துக் கொள்ள ஓர் அருமையான இடமாக இருக்கும். இதில் நம் மொபைல் போன் கேமரா மட்டுமின்றி, கம்ப்யூட்டர் மற்றும் வேறு சாதனங்கள் வழியாக எடுக்கும் போட்டோக்களையும் விடியோக்களையும் அப்லோட் செய்து பதிந்து வைக்கலாம்.
சென்ற வாரம் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் வழியாகவும் மேற்கொள்ளப்படும் வகையில் உள்ளது. இணைய தளம் வழியாகவும் இதனை இயக்கலாம். இங்கு பதியப்படும் போட்டோ மற்றும் விடியோ பைல்களை, நாள், மாதம், ஆண்டு மற்றும் நிகழ்ச்சியின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கலாம். இந்த தளத்திற்கு அப்லோட் செய்யப்படும் போட்டோக்கள் அனைத்தும், கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் பாதுகாப்பாக பதியப்பட்டு வைக்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை போட்டோக்கள் மற்றும் விடியோக்களை வேண்டுமானாலும் பதியலாம். ஒவ்வொரு முறையும் ஒருவர் அப்லோட் செய்திடும் போட்டோ, அவர் அப்லோட் செய்த அனைத்து போட்டோக்களிலும் முதலாவதாக வைக்கப்படும். இதனால், தொடர்ந்து அவர் தன் போட்டோக்களைத் தேடி அறிய இது எளிதான வழியைத் தருகிறது.
இங்கு ஒருவர், எந்த வகையில் தான் அப்லோட் செய்திடும் போட்டோக்களை வகைப்படுத்துகிறார் என்பதனை கூகுள் உணர்ந்து, தொடர்ந்து அவர் செயல்படுகையில், அதற்கேற்ற வகையில் வழிகளைப் பரிந்துரைக்கிறது. போட்டோக்களைத் தேடுகையில், அவை காட்டும் அல்லது வகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் தேடுவதற்கான வழிகள் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, “வெயிலின் கொடுமை” என்ற பொருளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை அதே வகையில் தேடி எடுத்துப் பார்க்கலாம்.
நீங்கள் அப்லோட் செய்த போட்டோ ஒன்றை, உங்கள் நண்பருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதற்கான மெனுவில் "Get a link" என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் லிங்க்கினை, உங்கள் நண்பருக்கு அனுப்பலாம். இதனால், உங்கள் நண்பர், அந்த போட்டோவினைத் தன் மொபைல் போனில் டவுண்லோட் செய்துதான் பார்க்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. தொடர்பில் கிளிக் செய்து, போட்டோவைப் பார்க்கலாம். தேவைப்பட்டால் மட்டுமே டவுண்லோட் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட் அணிகலன்கள் (Android Wear):
அணிந்து இயக்கப்படும் சாதனங்களில், ஸ்மார்ட் வாட்ச் எனப்படும் கடிகாரங்கள் இப்போது பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. கூகுள் நிறுவனம் இந்த வகையில் தன் “ஆண்ட்ராய்ட் வேர்” கடிகாரங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இவற்றில் கீழ்க்காணும் புதிய வசதிகள் தரப்படுகின்றன.
Always on screens என்பதன் மூலம், கடிகாரம் பயன்படுத்தாத போது, திரையின் ஒளி அளவு வெகுவாகக் குறைக்கப்படும். ஆனால், மீண்டும் சாதனத்தை இயக்காமலேயே, பயனாளர்கள் திரைக் காட்சியைப் பெறலாம். மணிக்கட்டு அசைவுகள் துல்லியமாகப் படிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் இயக்கம் இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டும் படங்கள் கைகளினால் வரையப்பட்டாலும் புரிந்து கொள்ளப்படும். இதுவரை, ஆண்ட்ராய்ட் அணிகலன்களுக்காக, 4,000க்கும் மேற்பட்ட செயலிகள் உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உடனடி கூகுள் தகவல்:
Google Now செயலாக்கத்தில் புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நிகழ்வு ஒன்றினை ரசித்துக் கொண்டிருக்கையில், நமக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதற்கான தகவல் உடனடியாக, புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அதில் தரப்படும். எடுத்துக் காட்டாக, ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடல் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருந்தால், அவருடைய இயற்பெயர் என்ன என்று கேட்டால், உடனே அந்த தகவல் புதிய டேப் ஒன்றில் தரப்படும்.
அதே போல, ஏதேனும் ஒரு சொல் அல்லது சொல் தொகுதியில் டேப் செய்தால், அது குறித்த கூடுதல் தகவல் தரப்படும்.
பன்னாட்டளவில் அதிக பட்ச பயன்களைத் தன் செயலிகள் மூலமாகத் தர வேண்டும் என்ற குறிக்கோளுடன், வளர்ந்து வரும் நாடுகளில் இணைய இணைப்பு இல்லாத நேரங்களிலும் தேடலுக்கான தகவல்களைத் தரும் வகையில் வழிகள் தரப்படுகின்றன. யு ட்யூப் விடியோ மற்றும் கூகுள் மேப் தேடல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பதிந்து வைத்து இயக்கும் வகையில் இவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சோதனைச் சாலை வசதி:
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்க மாநாடு இது. அந்த வகையில், செயலிகளை உருவாக்க, பல புதிய தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டன. அவற்றில் முக்கியமானது Cloud Test Lab என்ற சோதனைச் சாலையாகும். செயலிகளை உருவாக்கி, இந்த சர்வரில் அப்லோட் செய்துவிட்டால், செயலி பத்துவகையான சாதனங்களில் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் தரப்படும்.
மேலே தரப்பட்டவையுடன் இன்னும் சில புதிய தொழில்நுட்ப வசதிகள் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டன.
Post a Comment Blogger Facebook