இன்னும் பத்து ஆண்டுகளில், இப்போது இயங்கும் டிஜிட்டல் உலகில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும்? மூர் விதியின் படி, மாற்றங்கள் ஏற்பட்டால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள் எப்படிப்பட்ட மேம்பாட்டினை அடையும் என எண்ணிப் பார்க்கலாம்.
ஆயிரம் டாலருக்கு மனித மூளை
மனிதனுக்குத் தேவையான மூளை ஆயிரம் டாலருக்கு (ஏறத்தாழ ரூ. 63,000) கிடைக்குமா? வாங்கி எங்கு எதில் எப்படி வைப்பது? எனக் குழப்பமாக இருக்கிறதா? இது மனிதனின் மூளை அல்ல; மனிதனின் மூளை எந்த திறன் அளவில் செயல்படுகிறதோ, அதே திறன் அளவு கொண்ட, அதே செயலாக்கத் திறன் சுழற்சி கொண்ட கம்ப்யூட்டர். ஒரு விநாடியில், 10,000 ட்ரில்லியன், அதாவது பத்தாயிரம் ஒரு லட்சம் கோடி அதாவது பத்து லட்சத்து பத்து லட்சம் சுழற்சிகளை ஒரு விநாடியில் மேற்கொண்டு செயல்படும் திறன் கொண்டது. மனித மூளையின் அதிக பட்ச செயல் சுழற்சித் திறன் இது என்பதால், இந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரை மனித மூளை என்கிறோம். பத்தாண்டுகளில், நமக்குக் கிடைக்க இருக்கும் கம்ப்யூட்டர் இந்த செயல் திறன் கொண்டதாக இருக்கும். எங்கும் எதிலும் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இடம் பெறும்.
Internet of Everything என்று அழைக்கப்படும் இத்தகையை இணைப்பு வட்டங்களில், சாதனங்களும் மனிதர்களும் இணைக்கப்பட்டு, இவர்களுக்கிடையே தகவல்கள் பரிமாறப்படும். இந்த வகையில், இணைப்பில் இருக்கும் சாதனங்கள் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி என்ற எண்ணிக்கையைத் தொடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாதனத்திலும் குறைந்தது 12ம் அதற்கு மேற்பட்ட சென்சார்களும் இயங்கி, அதன் இயக்கத்திற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டே இருக்கும். நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டு, பத்தாயிரம் ஒரு லட்சம் கோடி சென்சார்கள், நம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும். சிஸ்கோ நிறுவனம் இது குறித்து தெரிவிக்கையில், அனைத்திலும் இணைய இணைப்பு கொண்ட வளையமானது, 19,000 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள பொருளாதாரச் சூழ்நிலையை உருவாக்கும் என்று அறிவித்துள்ளது.
புதியதொரு உலகு
முழுமையான மிகச் சிறந்த அறிவாற்றல் கொண்ட உலகம் உருவாகும். அதனை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கார்கள், சாட்டலைட் சிஸ்டம், நாம் அணிந்து இயக்கும் மொபைல் சாதனங்கள், கேமராக்கள் எனப் பல வகையான சாதனங்களில் அமைக்கப்பட்டு இயங்கும் பத்து லட்சம் கோடி சென்சார்கள் மூலம் நாம் நமக்கு வேண்டியதை, எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பெற முடியும். கேள்விகளை அமைத்தால், அதற்கான சரியான, முழுமையான பதில் நமக்குக் கிடைக்கும். அந்த அளவிற்கு நமக்கு ஒரு பரிபூரண உலகம் உருவாக்கப்பட்டு செயல்படும்.
இணைக்கப்பட்ட பல கோடி மக்கள்
இந்த உலகில் வாழும் மக்களில், 480 கோடி பேர் தொடர்ந்து இணைப்பில் இருப்பார்கள். பேஸ்புக், ஸ்பேஸ் எக்ஸ், கூகுள், குவால்காம் போன்ற இணைய நிறுவனங்கள், இதற்கான முயற்சிகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. ஒரு விநாடியில், இவர்களுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்படும் டேட்டா ஒரு மெகா பிட் என்ற அளவினைத் தாண்டியதாக இருக்கும்.
உயரும் இணைக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை
உலகப் பொருளாதாரத்தைக் கையாள்வதில், தற்போது 300 கோடி மக்கள் இணைப்பில் இருக்கின்றனர். இவர்களுடன் விரைவில் 500 கோடி பேர் இணைவார்கள். உலகப் பொருளாதாரச் சந்தையில் இவர்கள் மூலம், பல லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சந்தை உருவாக்கப்படும். இவர்களின் இணையத் தொடர்பு, நாம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் கொண்ட மோடம் வழி இணைப்பாக இருக்காது. குறைந்தது நொடிக்கு ஒரு மெகா பிட் வேகத்தில் இணைக்கப்பட்டு இயங்குவார்கள். இவர்களுக்கு கூகுள், க்ளவ்ட் முப்பரிமாண அச்சு, அமேஸான் இணைய சேவை, செயற்கை நுண்ணறிவு உலகம் போன்றவை உதவிடும்.
புதிய வகை மருத்துவ வசதிகள்
இன்றைக்கு இயங்குகின்ற உடல் நலம் காக்கும் மருத்துவமனை அமைப்புகள் மாற்றம் பெறும். புதிய வகை வர்த்தக முறைகளின் அடிப்படையில், மனித நலம் காக்கும் நிலையங்கள் உருவாகும். ஆண்டுக்கு 38 லட்சம் கோடி டாலர் மதிப்பில், இந்த புதிய வகை மக்கள் நலம் பேணும் அமைப்புகளில், கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், எஸ்.ஏ,பி., ஐ.பி.எம். போன்ற நிறுவனங்கள் நுழைந்து, பெரிய அளவில் இயங்கத் தொடங்கும். இன்றைக்கு இயங்கும் திறனற்ற அமைப்பு ஒழிந்து போய், அதன் இடத்தில், புதிய தகவல் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் மருத்துவ வசதி தரும் அமைப்புகள் உருவாகும்.
அணிந்து கொண்டு நம் உடல் நலத்தினை அறிந்து கொள்ளும் பயோ மெட்ரிக் மொபைல் சாதனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் சாதனங்கள், நம் உடல் நலத்தைப் பேணும் அமைப்பின் தலைமை நிர்வாகியாக நாமே இயங்குவோம். வளர்ந்து வரும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்,இதய நோய், நரம்புகள் செயல் இழக்கும் நோய் மற்றும் புற்று நோயின் மூலக் கூறினைக் கண்டறியும். இவற்றைக் கண்டறிவதன் மூலம், இவற்றிலிருந்து விடுபடும் வழிகள் எளிதாக உருவாக்கப்பட்டுக் கிடைக்கும். நாம் ஒவ்வொருவரும் நமக்கென நம் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை மீண்டும் புதியதாக உருவாக்கும் திறன் பெறுவோம். இவை கெட்டுப் போனால், நமக்கு இவற்றைத் தர இருக்கும் கொடையாளிக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை. காத்திருந்து மரணத்தைத் தழுவும் அவசியம் நேராது.
காட்சித் தோற்றங்கள்
பேஸ்புக் (Oculus), கூகுள் (Magic Leap), மைக்ரோசாப்ட் (Hololens), சோனி, குவால்காம், எச்.டி.சி. ஆகிய நிறுவனங்கள், பல கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து, புதிய வகை காட்சித் தோற்றங்களை உருவாக்கும் வழிகளைக் காண, ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. நாம் இப்போது பார்க்கும் திரைகள் இனி இருக்காது. மொபைல் போன், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி ஆகியவற்றில் திரைகள் இருக்காது.
இவற்றிற்குப் பதிலாக, நம் கண்களில் அணியும் சாதனங்கள், தோற்றத்தைக் காட்டும். இவை, கூகுள் அறிமுகப்படுத்திய கூகுள் கிளாஸ் போல எல்லாம் இருக்காது. நவ நாகரிக மனிதர்கள் அணியும் கண் கண்ணாடிகள் போலத்தான் இருக்கும். இதனால், இது போல காட்சிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தரப்படுவதால், பல வர்த்தக அடிப்படைகள் மாற்றம் அடையும். வர்த்தகம் பெருகும். சில்லரை வர்த்தகம், ரியல் எஸ்டேட், கல்வி, பயணங்கள், பொழுது போக்கு மற்றும் பிற அடிப்படை இயக்க வழிகளில் பெரும் அளவில் மாற்றங்கள் உருவாகும்.
செயற்கை நுண்ணறிவு
இனி வரும் பத்து ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்னும் பிரிவில் தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இப்போது இருக்கும் செயலிகளின் இடத்தில் புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு இயக்கத்தில் இருக்கும். ஐ.பி.எம்., வாட்சன், டீப் மைண்ட், வைகேரியர்ஸ் போன்றவை, அடுத்த பத்தாண்டுகளில் தேவைப்படும், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்கும். நம்மிடம் இருக்கும் செயற்கை நுண்ணறிவு சாதனங்களை, நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல்களைப் படிக்க அனுமதி தருவோம். நம் பயோ மெட்ரிக் தகவல்களை அவை படித்து முடிவுகளை அறிவிக்கும். சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கூறும். தீர்வுகள் எப்படி, எந்த வகையில் கிடைக்கும் என்பதனையும் விளக்கும்.
புதிய நாணயப் பரிமாற்றம்
இதுவரை Blockchain என்பது குறித்து நீங்கள் படிக்காமல் இருந்தால், அது குறித்த இணைய தளங்களைப் பார்க்கவும். ஏற்கனவே, பிட் காய்ன் (bitcoin) என்ற நாணயப் பரிமாற்றம் குறித்து, பல நாடுகளில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து தெரிந்திருப்பீர்கள். பிளாக் செயின் என்ற அடிப்படையில் தான், இந்த பிட் காயின் என்னும் கரன்சி முறை அறிமுகமானது. பாதுகாப்பான நாணயப் பரிமாற்ற முறை இனி உருவாக்கப்பட்டு, நம்முடைய நிதிப் பரிமாற்றங்கள், அசையும் அசையா சொத்துகள் விற்பனை மற்றும் பிறவகை செல்வ சொத்து பரிமாற்றங்கள் அனைத்தும், இடைத் தரகர் யாரும் இன்றி, நேரடியாக இந்த பிளாக் செயின் மூலம் நாம் மேற்கொள்ளலாம். இதனை எப்படி உருவாக்கி, மக்களிடையே கொண்டு செல்லலாம் என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இது நடைமுறைக்கு வரலாம்.
மாபெரும் மாற்றங்களை நோக்கி
நாம் நம்மால் நம்ப முடியாத மாற்றங்களை நோக்கி, மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இதனை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னால், தொலைபேசியும், இணையப் பயன்பாடும் எப்படி இயங்கின, இப்போது எப்படி உள்ளன என்று சற்று எண்ணிப் பார்த்தாலே போதும். நம் முன்னேற்ற வேகத்தினை நீங்கள் உணரலாம். அதே மாற்ற வேகம் இன்னும் அதிகமான வேகத்துடன், நமக்கு முற்றிலும் நம்ப இயலாத ஓர் உலகைத் தரப்போகிறது. ஏனென்றால், “நிலையானது மாற்றம் தான்”. அந்த மாற்றத்தினை எதிர் கொள்ளத் தயாராவோம்.
Post a Comment Blogger Facebook