நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இதற்கென நீங்கள் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொண்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில் பல, உங்கள் கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக இருக்கலாம். இந்த புரோகிராம்கள், நீங்கள் இணைய உலாவில் இருக்கையில், விளம்பரங்களைக் காட்டுபவையாக உள்ளன. அந்த விளம்பரத்தில் சிக்கி, அவற்றில் கிளிக் செய்கையில், அவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அப்படியே சுருக்கி நகலெடுத்து அனுப்புகின்றன. இதனால், அந்த இணைய தளங்கள் பாதுகாப்பானவையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் தரும் தகவல்கள் இந்த விளம்பரங்களால் திருடப்படுகின்றன.
லெனோவா நிறுவனம் அண்மையில் விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில், Superfish என்ற நிறுவனத்தின் விளம்பர புரோகிராம்களை இணைத்து விற்பனை செய்தது. இந்த புரோகிராம்கள், நாம் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துகையில், இடையே அதன் விளம்பரங்களையும் இணைத்துக் காட்டின. அதில் கிளிக் செய்திடும் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்பின.
இந்த பிரச்னை வெளிவந்தவுடன், கூகுள் நிறுவன ஆய்வாளர்கள், பெர்க்லீ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இது குறித்து ஆய்வு செய்தனர். முடிவுகள் மிகவும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தன. குரோம் பிரவுசருக்கான, கூகுள் அனுமதித்த, எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், மூன்றில் ஒரு பங்கு புரோகிராம்கள் ஏமாற்றுபவையாகவும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களாகவும் இருப்பது தெரிய வந்தது. உடனே, கூகுள் அவற்றில் 200க்கும் மேற்பட்டவற்றை தன் தளத்திலிருந்து நீக்கியுள்ளது. ஏறத்தாழ 1.4 கோடி பயனாளர்கள், 192 எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இனி வரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், இதைப் போல் செயல்படாமல் இருக்க, புதிய தொழில் நுட்பத்தினை கூகுள் ஆய்வாளர்கள் புகுத்தியுள்ளனர்.
கூகுள் இணைய தளங்களைப் பார்வையிடும் பயனாளர்களில், 5 சதவீதம் பேர் இது போல குறைந்தது ஒரு புரோகிராமினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிலர் இரண்டு அல்லது நான்கு புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ்.எக்ஸ் என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் கம்ப்யூட்டர்களிலும் இந்த மோசமான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பரவியுள்ளன.
பொதுவாக, கூகுள் நிறுவனம், இது போல, விளம்பரங்களை இடைச் செருகுவதைத் தடுப்பதில்லை. ஆனால், அவற்றிற்கான வரைமுறைகளை, நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த விளம்பரங்களில் இருமுறை கிளிக் செய்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பது, நிபந்தனைகளில் ஒன்றாகும். ஆனால், பல புரோகிராம்கள் இந்த முக்கிய நிபந்தனையை நிறைவேற்றாததால், இவற்றின் திருட்டுத்தனம் வெளியே வந்தது. கூகுள் தற்போது அத்தகைய புரோகிராம்களை நீக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
Post a Comment Blogger Facebook