9LEx5Uu.png


கல்லூரியில் தங்களின் படிப்பை முடிக்காமல் வெளியேறிய இரண்டு மாணவர்கள் தொடங்கிய சாப்ட்வேர் நிறுவனம், இன்று உலகையே மாற்றி, தனி மனிதர்களின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறி, தொடர்ந்து இயங்கி, சென்ற  (ஏப்ரல் 4) தன் 40 ஆவது ஆண்டினைத் தாண்டியது. ஆம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வயது 40. அதனைத் தொடங்கிய பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோர் தான், அந்த இரண்டு மாணவர்கள். நிறுவனத்தைத் தொடங்கிய போது, பில் கேட்ஸ் வயது 19. ஆலன் வயது 22. 

இன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நேரடி ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சியாட்டில் நகருக்கு வெளியே, 80 லட்சம் சதுர அடி பரப்பளவில் தன் அலுவலகத்தைக் கொண்டுள்ளது. உலகெங்கும் இதன் கிளைகள் இயங்குகின்றன. இந்நிறுவனம் வழங்கும் சாப்ட்வேர், உலகில் பயன்படுத்தப்படும் 90% கம்ப்யூட்டர்களை இயக்குகிறது. உலகில் இயங்கும் நிறுவனங்களில் அதிக மதிப்பு கொண்டவற்றில் மூன்றாவது இடத்தை மைக்ரோசாப்ட் கொண்டுள்ளது. 

இதன் நிறுவனர் பில் கேட்ஸ், 2000 ஆண்டில், இதிலிருந்து ஓய்வு பெற்று, ஆலோசகராக உள்ளார். 40 ஆண்டு கால நிறைவை ஒட்டி, மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். அதில், “வரும் ஆண்டுகளை, இந்தப் புவியில் வாழும் ஒவ்வொருவருக்கும் தொழில் நுட்பத்தின் சக்தி கிடைத்திடப் பயன்படுத்தும்படி” கேட்டுக் கொண்டுள்ளார். மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், தனிநபர் கம்ப்யூட்டர் பயன்பாடு பரவவும், சாப்ட்வேர் பயன்பட வேண்டும் என்று தன் இலக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

”நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஒவ்வொரு வீட்டிலும், அங்குள்ள ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் என்று நானும் பால் ஆலனும் இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொண்டோம். அப்போது பலர் இது நடைமுறையில் சாத்தியமா? என்று எங்கள் அறிவைச் சந்தேகப்பட்டனர். ஆனால், இப்போது உலகில் எந்த அளவிற்குக் கம்ப்யூட்டர் பயன்பாடு பெருகியுள்ளது என்பதனை அறியும்போது மிக ஆச்சரியமாக உள்ளது. இந்தப் புரட்சியில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கினை எண்ணி நாம் பெருமைப்படலாம்.” எனத் தன் செய்தியை பில் கேட்ஸ் தொடங்கியுள்ளார்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், தான் கண்ட கனவு நிறைவேறி வருவதாகத் தெரிவித்துள்ள பில் கேட்ஸ், இந்த உலகை சாப்ட்வேர் தான் வலிமை கொண்டதாக மாற்ற முடியும். வாழ்வின் பரிமாணங்களைச் சிறப்பானதாக்கும் இலக்கை மைக்ரோசாப்ட் என்றும் மறந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ”அடுத்து நாம் செயல்படுத்தப் போவதுதான் மிக முக்கியமானதாகும்” என்று தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அன்றாட பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட பில் கேட்ஸ், தொடர்ந்து அதன் தலைமை நிர்வாகியான சத்ய நாதெள்ளாவிற்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தற்போது 'பில் மற்றும் மெலிண்டா பவுண்டேஷன்' என்னும் அறக்கட்டளை அமைப்பின் மக்களுக்கான உதவிகளை வழங்கும் பணிகளைக் கவனித்து வருகிறார். அவருடைய தனிப்பட்ட வருமானம், அவரைக் கடந்த 21 ஆண்டுகளில், 16 முறை, உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் வைத்துள்ளது. அவர் மரணத்திற்குப் பின்னால், தன் சொத்தின் 95% பணம் தர்ம காரியங்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதுவரை தன் அறக்கட்டளைக்கு 2,800 கோடி டாலர் நிதி அளித்துள்ளார். தன் ஒவ்வொரு குழந்தைக்கும் (இரண்டு மகள், ஒரு மகன்) தலா ஒரு கோடி டாலர் மட்டுமே பில் கேட்ஸ் ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பில் கேட்ஸ் அளித்துள்ள செய்தியை முழுமையாகப் படிக்க விரும்பினால் https://twitter.com/roychoudhary/status/584044739000868865 என்ற இணைய தளம் செல்லவும்.

Post a Comment Blogger

 
Top