மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எத்தனை வகைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஆய்வுப் பிரிவின் துணைத் தலைவர் Tony Prophet இது குறித்து வலைமனைச் செய்தியில் குறிப்புகளைத் தந்துள்ளார். விண்டோஸ் 10 இயக்க முறைமை, இன்னும் ஓரிரு மாதங்களில், பெரும்பாலும் ஜூலையில், 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது.
பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள், மொபைல் போன்கள், எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனங்கள், ஹோலோ லென்ஸ் மற்றும் சர்பேஸ் ஹப் ஆகிய அனைத்திலும் இயங்கும் தன்மையைக் கொண்டதாக விண்டோஸ் 10 இருக்கும். அத்துடன், நாம் இந்த உலகில் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களிலும் இது இயங்கும். ஏ.டி.எம். சாதனங்களிலிருந்து நம் இதயத் துடிப்பினை அளக்கும் கருவி வரையிலும், பல்வேறு சாதனங்களிலும் இது இயங்கும்.“ எந்த சாதனத்தைப் பயன்படுத்தினாலும், மக்களுக்கு அது தரும் அனுபவம், புதியதாகவும், இனிமையானதாகவும் இருக்கும்' என டோனி ப்ராபட் கூறியுள்ளார். மொத்தம் ஏழு வகையான விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகவுள்ளது. அவை:
விண்டோஸ் 10 ஹோம்:
நுகர்வோரை மையப்படுத்திய டெஸ்க் டாப் பதிப்பு. இதில் விண்டோஸ் இயக்க முறைமையின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும். எட்ஜ் பிரவுசர், தொடு உணர் திரை உள்ள டேப்ளட் பி.சிக்கான Continuum டூல். கார்டனா இணைப்பு, போட்டோ, வீடியோ, மேப், மெயில், காலண்டர் மற்றும் மியூசிக் பைல்களை இயக்க செயலிகள், விண்டோஸ் ஹலோ எனப்படும் முகம் பார்த்து அனுமதி வழங்கும் டூல் ஆகியவை கிடைக்கும். ஆபீஸ் அப்ளிகேஷன் வெளியாகும்போது, இலவச அப்டேட் ஆகத் தரப்படும்.
விண்டோஸ் 10 மொபைல்:
விண்டோஸ் போன்கள், மற்றும் சிறிய அளவிலான (3 முதல் 7.99 அங்குல அளவிலான திரை கொண்ட ) டேப்ளட் சாதனங்களுக்கானது.
விண்டோஸ் மொபைல் எண்டர்பிரைஸ்:
இது விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கென, மொத்த எண்ணிக்கையில் உரிமங்களை வாங்குவோருக்கு மட்டும்.
விண்டோஸ் 10 ப்ரோ:
விண்டோஸ் 10 ப்ரோ:
மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக் கூடிய விண்டோஸ் 10 டெஸ்க் டாப் பதிப்பு. தொழில் நுட்ப ரீதியாகப் பயன்படுத்துவோருக்கு இது பொருந்தும்.
விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ்:
நிறுவனங்களுக்கான விண்டோஸ் 10. அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் வேண்டுவோருக்கானது. இந்த பதிப்பு, முதல் ஆண்டு இலவச பதிப்பினை நாடுவோருக்கானது அல்ல. இதற்கென தனியே உரிம ஒப்பந்தம் உண்டு.
விண்டோஸ் 10 கல்விக்கானது:
கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கானது. கல்வி நிலையங்களுக்கென மொத்தமாக உரிமம் பெற விரும்புவோருக்கானது. பள்ளிகளும் மாணவர்களும், தங்கள் விண்டோஸ் 10 ஹோம் மற்றும் ப்ரோ பதிப்புகளிலிருந்து, இந்த பதிப்பிற்கு மாறிக் கொள்ள வழிகள் தரப்படும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளபடி, விண்டோஸ் 10 எண்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 10 மொபைல் எண்டர்பிரைஸ் ஆகிய பதிப்புகள், ஏ.டி.எம். மையங்களில் உள்ள சாதனங்கள், வர்த்தக மையங்களில் இயங்கும் விற்பனை கையாளும் சிறிய சாதனங்கள், கைகளில் வைத்துப் பயன்படுத்தும் சிறிய டெர்மினல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தப்படும் ரோபோக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும்.
விண்டோஸ் ஐ.ஓ.டி. கோர்:
இந்த பதிப்பு, விலை குறைந்த, அதிகப் பயன் இல்லாத சாதனங்களில் பயன்படுத்தவென வடிவமைக்கப்பட்டது.
Post a Comment Blogger Facebook